ஞாயிறு, 27 செப்டம்பர், 2015

           ஹைக்கூ


இன்றைய பசியை
மறக்கச் செய்தது
மாலை பெய்த பலத்த மழை.


மதங்களையறியாத
மற்றுமொரு ஒரே மொழி
மழலை மொழி


பார்வைக்கு வைத்திருந்தனர்
தொல்பொருட்காட்சியில்
வட்டக் கிணறும் சதுரக் கிணறும்


தன்முகம் பார்க்க
அலையும் நிலா
நீரின்றிக் குளம்.
                   காலம்


இன்று கிடைக்காது
நேற்று;
நாளையும் வாராது
இன்று;

இன்றே வாழ்ந்துவிடு
காலம் நகரும் முன்!




                         தனிமை

          பல்லியும் பாச்சாவும்
          சிலந்தியும் எறும்பும்
          போக்குகின்றன
           மனிதர்களின் தனிமையை.  


          பயணம்

நீளும் பாதையில்
பயணம் செய்ய ஆசைப்பட்டு
கால்களின்றி
நடக்கிறேன்......நடக்கிறேன்....
கால வெளியில்.


                             மாற்றம்

                இனி ஊறாது
                என்ற கிணறு
                இருப்பை மாற்றிக் கொண்டது
                ஒரு சிறு அறையாய்.

புதன், 23 செப்டம்பர், 2015

சாகாவரம்

சாகாவரம்

விழித்தெழ வேண்டுமென
நினைக்கும் போதெல்லாம்
தூங்கிவழிகின்றேன்.

முகிழ்த்தெழ வேண்டுமென
முயலும் போதெல்லாம்
வாடிவதங்குகின்றேன்.

சிரித்திட வேண்டுமென
சிந்திக்கும் போதெல்லாம்
அழுது தொலைக்கின்றேன்.

திறந்து விட வேண்டுமெனச்
செயல்படும்போதெல்லாம்
பூட்டி வைக்கின்றேன்.

ஈட்டுதற்கு வேண்டுமென
எண்ணும் போதெல்லாம்
செலவழித்து விடுகினறேன்.

ஆனாலும்.....
மரித்துப்போகாமல்
உயிர்த்தெழ வேண்டுமென்ற
உன்னத உந்துதலில்
ஊன்றுகோலாய் நிற்கும்
தன்னம்பிக்கை மட்டும்
சாகாவரம் பெற்று.

அண்ணல் வளர்த்த அறம்

வெண்பா

அகிம்சையும்
       அன்பும்
             அசையா
                  உறுதி
சகித்திடும்
        தன்மையும்
              சாந்தம் -
                   முகிழ்த்திடும்
வண்ண
      மலராய்
            வடிவெடுத்து
                     வந்ததுவே
அண்ணல்
       வளர்த்த
                  அறம்!
__________________________
"இளவல்" ஹரிஹரன்.

புதியதொரு அறிமுகம்

எனக்கு முன்னே
எத்தனையோ வலைப்பதிவர்
இருந்தாரப்பா.....
இன்னுமொரு வலைப்பதிவராய்
இங்கே நான் அவதரித்தேன்!

புதிதாய்ச் சொல்வதற்குப்
புறப்பட்டேன்.......
பூக்கள் வரவேற்றன,
பட்டாம் பூச்சிகள் என்வலையில்
படபடப்பாய் வந்து போகச் சம்மதித்தன.

புத்தனல்ல நானொன்றும்....ஆசைகளைப்
புறந்தள்ளிக் கடந்துபோக,
சித்தனல்ல நானொன்றும்....வார்த்தைகளைத்
தத்துவமாய்த் தினம் பொழிய!

எனக்குள் தோன்றும்
எண்ணங்களை விதைக்க...
எழுத்து விதைகளை வித்திட
கழனியொன்று கண்டேன்,
கட்டுரைக்க வந்தேன்.

முந்தும் முத்தமிழைச்
சந்தம் கொண்டும் காட்டுவேன்...
சிந்தும் சொற்களால்
சதங்கை கட்டியும் ஆடுவேன்...

யாதும் ஊரென்றானதால்
யாவரையும்கேளிராக்கினான்
முன்பிறந்த மூத்த முப்பாட்டனுக்கும்
முப்பாட்டன்.

இனியென்ன......
இருகைகொட்டி வரவேற்பீர்!
எனையும் தத்தம்சிரமேற்பீர்!
              "இளவல்" ஹரிஹரன்
                       24-9-2015