புதன், 16 மே, 2018

ஸ்ரீமந் நாயகி சுவாமிகள் காட்டும் வாழ்க்கை முறையும் வைணவ நெறியும்

               ஸ்ரீமந் நாயகி சுவாமிகள்
                            காட்டும்
                 வாழ்க்கை முறையும்
                  வைணவ  நெறியும்

  ஸ்ரீமந்  நடன கோபால நாயகி சுவாமிகள் சிறந்த ஸ்ரீவைணவராயும்
ஆசார குணசீலராயும் ஆன்மிக குல குருவாயும் நம்மை வழி நடத்திச்
செல்பவர்.
        தொடக்கத்தில், இளம்பிராயத்தில் திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் அருட்பார்வையால் வழிநடத்தப்பட, பின்
பரமக்குடி திரு நாகலிங்க அடிகளிடம் முறையே தீட்சை பெற்று
சித்துகள் கற்றார். சித்துவிளையாடல்கள் புரிந்து சித்தரெனவும்,
மகான் எனவும் புகழப் பெற்றார். சிவகங்கை அரசர் முன் சித்து
விளையாடல் காட்டி அவருக்கு அருள் செய்தார்.
           அங்கிருந்து மதுரைக்கு வரும்வழியில் பொன் பொருள்
அபகரித்த கள்வர்களுக்குக் கண்பார்வை இழக்கச்செய்து, மனம்
வருந்தித் திருந்திய கள்வர்களுக்கு மீளக் கண் பார்வை அளித்தார்.
           தேசாந்திரியாய்த் தலங்கள் தோறும் செல்கையில், ஆழ்வார்
திருநகரியில் ஸ்ரீவைணவ ஆசார்யர் வடபத்ரார்யர் சுவாமிகள்,  நடனகோபாலரதுதோற்றப் பொலிவையும் தெய்வாம்சத்தையும் உணர்ந்து இவரதுகருத்தை மடைமாற்றி ஸ்ரீவைணவத்தில் கலந்திடச் செய்தார்.
           திருவெட்டெழுத்து மந்திரம் முறையே ஓதி, கற்கச்செய்த்,
திருவிரண்டு மந்திரார்த்தங்களைப் பொருள் விளங்கச் செய்தார்.
சரம சுலோகத்தின் உடபொருளை உணர்த்தி, ஸ்ரீவைணவச்
சின்னங்கள் தாங்கச் செய்து திருவடிசம்பந்தம் ஏற்படுத்தித்
தந்தார். நடன கோபாலர் என்ற திருநாமத்தையும் இட்டார்.
            தமது ஆசார்யர் வழி பின்பற்றி, அவர் பெயர் விளங்கச்
செய்ய தம் ஒவ்வொரு கீர்த்தனையின் இறுதிப் பத்தியில் ஆச்சாரியர்
வடபத்ரார்யர் அருளிச்செய்து வழிநடத்தியதைப் பெருமிதத்துடன்
குறிப்பிட்டு தம் முத்திரை பதித்து பாடி அருளிச் செய்தார்.
            இதன் மூலம் ஆசார்யரை மறவாத விசுவாச மனோபாவத்தை
வெளிப்படுத்தி தம் குரு பரம்பரையை நிலைநாட்டினார்.
             இன்றளவும் ஸ்ரீமந் நடனகோபால நாயகி சுவாமிகள் அவர்களைத் தம் மானசீக குருவாக, ஆசார்யராக ஏற்று, அவர் வழி
வைணவ சம்பிரதாயங்களைக் கடைப்பிடிக்கும் வைணவர்கள்
ஏராளம்.
              அவர் தம் பிரபந்தக் கண்ணிகளில் அருளிச் செய்தவற்றில்
நமக்கு உரிய வாழ்க்கை வழிமுறைகளும் வைணவ நெறிகளும் நம்மவர்க்குப் பயனளிக்கும் என்ற கருத்தில் ஓர் உலக நீதியைப்
போல எது எது நம் வாழ்வில் கூடாத, வேண்டாத பழக்கங்கள்
என்பனவற்றை ஸ்ரீமந் நாயகி சுவாமிகள் பேரருளால் இந்நூலில்
தொகுத்தளிக்க இயன்றவரையில் முயன்றிருக்கிறேன்.
               ஸ்ரீமந் நாயகியார் வகுத்துத் தந்த வாழ்க்கை வழிகளையும்
வைணவ நெறிகளையுந் தவறாது பின்பற்றி வாழ்வில் வெற்றி பெற,
சகல செல்வ யோகமிக்க பெருவாழ்வு பெற, செங்கண் திருமுகத்துச்
செல்வத் திருமாலால் எங்கும் திருவருள் பெற்று இன்புற்றிருக்க,
தூமலர் தூவி வாயினால் பாடி மனத்தினால் எம்பெருமான் ஸ்ரீமந்நாராயணன் திருவடிகள் சிந்திப்போமாக.
                 ஸ்ரீமந் நடன கோபால நாயகி ஸ்வாமிகள் திருவடிகள்
சரணம்.
                 எம்பெருமானார் திருவடிகளே சரணம்.

                                                         என்றென்றும் அன்புடன்
                                                                       அடியேன்
                                                          " இளவல் " ஹரிஹரன்.