ஞாயிறு, 30 அக்டோபர், 2016

காதல் மறந்த கதை

முன்னாள் காதலியை
எதெச்சையாக என்
முன்னால் கண்டேன்.

அது ஒரு
மதியப் பொழுது
அலுவல் காரணமாய்
வங்கி சென்றிருந்தேன்
இருப்பு என்னவென்றறிய...

இருக்கையில்
இருந்தவள் என் முன்னாள்...

நரையோடிய முடியைப்
படிய வாரியெடுத்த குழல்...
கண்களில் மின்னும்
காதல் மின்னல் தெரியாமல்...

எந்திரத்தனமாய்
வங்கி இருப்புப் புத்தகத்துடன்
காசோலை நீட்டினேன்....

கண்ணால் காணாமலேயே
கார்டு இல்லையா என்றவள்
பதிலை எதிர்பாராமலேயே
காசோலையில் குறித்த
பணத்தை எண்ணிக் கொடுத்தாள்
எனை எண்ணாமலேயே....

பதிவிட்ட இருப்புப் புத்தகத்தை,
பாராமலேயே நீட்டினாள்...
செலவிட்ட தருணங்களால்
கால இருப்பு
கரைவது போல என்
வங்கி இருப்பும்
கரைந்திருந்த உண்மை

கடைசி வரை
நானும் அவளும்
ஒருவரை ஒருவர்
அறிமுகம் இல்லாதவராகவே
நடித்திருந்ததில்
இருவருக்குள் இருந்த
காதல்இருப்பு
வெகுவாகவே
கரைந்திருந்தது...

மனக்குரங்கு மட்டும்
நாற்பது வருடங்களுக்கு முன்
தாவியபடி என்னுடன்
ஓடிவந்து கொண்டிருந்தது.
            கவிஞர் "இளவல்"  ஹரிஹரன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக